பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண் வைத்தியர் கொலை விவகாரம் : சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!!

152

புதிய இணைப்பு : தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முதலாம் இணைப்பு : தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபருக்கும், அவரது மனைவிக்கும் தலைமறைவாக இருப்பதற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் மேலும் ஒரு சந்தேகநபர் ஆகியோரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கார் ஒன்றில் இருந்து இளம் பெண் வைத்தியரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டமையாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் காதலர் எனும் கூறப்படும் நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

வௌ்ளவத்தையில் இருந்து பேருந்தில் பிரதான சந்தேகநபர் அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போதே இந்த கைது இடம்பெற்றிருந்தது.

இந்நிலையிலேயே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.