வவுனியாவில் சுகாதாரப் பரிசோதகர்கள் அதிரடி : 580 லீற்றர் சீனிப் பாணி மீட்பு, பெண் ஒருவர் கைது!!

56

வவுனியாவில் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட அதிரடிச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, விற்பனைக்காகத் தயார்படுத்தப்பட்டிருந்த 580 லீற்றர் சீனிப் பாணி (செயற்கைத் தேன்) கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வீடு ஒன்றின் உரிமையாளரான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு (26.06.2026) இடம்பெற்றுள்ளது.

வவுனியா, வேப்பங்குளம், 8 ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சுரேந்திரன் அவர்களின் ஆலோசனையின் கீழ், சிரேஸ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மேஜெயா அவர்களின் வழிப்படுத்தலில், நெளுக்குளம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ம.அன்ரன் தலைமையில்,

பூவரசன்குளம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் டிலுக்சன், கூமாங்குளம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பவிந்திரன், சாஸ்திரிகூழாங்குளம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் துவாரகன் ஆகியோர் பொலிஸாரின் உதவியுடன் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சுகாதாரப் பரிசோதகர்களின் தீவிர சோதனையின் போது சீனிப் பாணி (திரவம்): 40 லீற்றர் கொள்ளளவு கொண்ட 7 கலன்களில் நிரப்பப்பட்டிருந்த சீனிப் பாணி மற்றும் பேரல்களில் காய்ச்சப்பட்ட நிலையில் இருந்த சீனிப் பாணி உட்பட மொத்தம் 580 லீற்றர் பாணி ஏனைய பொருட்கள்: பாணியை அடைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வெற்றுப் போத்தல்கள் மற்றும் ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் தேன்வதைகள் என்பன அவ்வீட்டிலிருந்து மீட்கப்பட்டன.

இவ்வீட்டில் சீனிப் பாணியினைக் காய்ச்சி, தேன் என நம்பவைத்து விற்பனை செய்த முக்கிய நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். எனினும், வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போலிச் சீனிப் பாணி உள்ளிட்ட பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா சுகாதாரப் பரிசோதகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.