இளம்ஜோடி மர்ம மரணம் : மரணத்தில் மறைந்துள்ள மர்மம்!!

213

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்துவின் மகன் பார்த்திபன். கொத்தனார் வேலை பார்த்து வந்த இவருக்கும், அருகில் உள்ள சாத்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், தொடர்ந்து பல்வேறு குடும்பப் பிரச்சினைகளும் வெடித்துள்ளன.

காதல் விவகாரம் தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே தகராறு நீடித்து வந்த சூழலில், பெண் வீட்டார் மீது பார்த்திபன் குடும்பத்தினர் அண்மையில் காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளித்துள்ளனர்.

அந்தப் புகாரில், பெண் வீட்டார் மீது சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இதனால் இரு தரப்பிற்கும் இடையே சாதி ரீதியிலான மோதல் போக்கு அதிகரித்து, கிராமத்தில் கடுமையான சுமுகமற்ற சூழல் நிலவி வந்தது.இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் சாத்தன்குடி கிராமத்தில் உள்ள குமரவேல் என்பவருக்குச் சொந்தமான ஒரு கொட்டகையில்,

பார்த்திபனும் அந்த 16 வயது சிறுமியும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். அந்த வழியாகச் சென்ற பொதுமக்களின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க 30-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாகக் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெண் வீட்டாரே தங்களது மகனைக் கடத்தி ஆணவக் கொலை செய்துவிட்டதாக இளைஞரின் குடும்பத்தினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வரும் நிலையில், காதலர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.