
வயல்வெளியில், குட்டி முள்ளம்பன்றி ஒன்றைச் செல்லப் பிராணியாகத் தன் பின்னே கூட்டிச்செல்லும் சிறுமி ஒருவரின் நெஞ்சை நெகிழவைக்கும் காணொளியொன்று தற்போது சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றது.
பசுமை நிறைந்த வயல்வெளியில் அச்சிறுமி நடந்து செல்ல, சிறிய முள்ளம்பன்றி சிறுமியை பின்தொடரும் அந்த காட்சி, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான அன்பின் அழகான வெளிப்பாடாக பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இந்தக் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, இது பங்களாதேஷில் பதிவுசெய்யப்பட்டதாக உலகம் முழுவதும் தகவல்கள் பரவின. பல சர்வதேச சமூக ஊடகப் பக்கங்களும் அதே தகவலைப் பகிர்ந்ததால், பெரும்பாலானோர் அதையே உண்மையென நம்பினர்.

ஆனால், பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீவிர உண்மைத் தேடலில், அந்த தகவல் முற்றிலும் தவறானது என்பது உறுதியாகியுள்ளது.
உண்மையில், இந்த மனதைத் தொடும் காணொளி இலங்கையின் பொலன்னறுவை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் காணொளி முதன்முதலாக கடந்த ஜூன் 11ஆம் திகதி, ஒரு இலங்கை முகநூல் பயனரால் பதிவேற்றப்பட்டுள்ளது.
அதில் இடம்பெற்ற தலைப்பும் விளக்கமும் முழுமையாக சிங்கள மொழியில் இருந்ததுடன், அதே கணக்கில் அச்சிறுமியும் முள்ளம்பன்றியும் ஒன்றாக விளையாடும் பல்வேறு காணொளிகளும் பின்னர் வெளியிடப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் இந்தக் கதையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன.
பங்களாதேஷ் என தவறாக உலகம் முழுவதும் பகிரப்பட்டாலும், கோடிக்கணக்கான மக்களின் மனங்களை கவர்ந்த இந்த அன்பின் கதை, உண்மையில் நம் இலங்கையின் ஒரு கிராமிய சூழலில் மலர்ந்த அரிய தருணம் என கூறப்படுகின்றது.
ஒரு சிறுமிக்கும் ஒரு குட்டி முள்ளம்பன்றிக்கும் இடையே உருவான இந்த அப்பாவியான பாசப் பிணைப்பு, எல்லைகளையும் மொழிகளையும் தாண்டி உலக மக்களின் இதயங்களை வென்று, தற்போது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரவலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





