
புதிய இணைப்பு : பிரபல கொத்து உணவகம் ஒன்றின் உரிமையாளரான தொழிலதிபர் விராஜ் விக்ரமநாயக்க, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, நுவகொட நீதவான் நீதிமன்றத்தால் தலா ரூபா 50,000 மதிப்புள்ள இரண்டு தனிநபர் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் பிரபலமான கொத்து உணவகம் ஒன்றின் உரிமையாளரான தொழிலதிபர் விராஜ் விக்ரமநாயக்க, தனது ஊழியர்களில் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (30) மகரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர் ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளர், தனது விற்பனை நிலையங்களில் ஒன்றில் ஒரு ஊழியரை வாய்மொழியாகத் திட்டியும், உடல்ரீதியாகத் தாக்கியும் காட்டும் சிசிடிவி காட்சிகள் அண்மையில் அதிகம் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவிய அந்தக் காணொளி, பரவலான பொது கவனத்தையும் விமர்சனத்தையும் ஈர்த்தது.
அதன் பிறகு, காணொளிக் காட்சி ஆதாரத்தின் அடிப்படையில் மகரகம பொலிஸ் ஒரு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த மே 5 ஆம் திகதி இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.





