வவுனியா மாநகரசபையின் செங்கோல் சர்ச்சை : முன்னாள் முதல்வர் மீது பொலிஸில் முறைப்பாடு!!

166

வவுனியா மாநகரசபையின் செங்கோலை, சபையின் முன்னாள் முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமாகாண ஆளுநரினால் வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் காண்டீபன் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் சபை வளாகத்திற்குள் நுழைந்து தனது சொந்தப் பொருட்களுடன் சபையின் செங்கோலையும் எடுத்துச் சென்றுள்ளதாகக் கடமையில் இருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சபை உறுப்பினர்களான சி.கிரிதரன் மற்றும் க.பிரேமதாஸ் ஆகியோர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,

இந்த விடயம் தொடர்பாக தாம் செயலாளரிடமும் ஆணையாளரிடமும் கேட்டபோது, அவர்களும் அதனை அறிந்திருந்ததாகக் குறிப்பிட்டனர். இதன் பின்னரே செங்கோல் காணாமல் போனமை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து முன்னாள் முதல்வர் காண்டீபனிடம் வினவியபோது அவர் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்,

கடந்த 24ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற மாநகர முதல்வர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே, நான் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. இதனையடுத்து, எனது அலுவலகத்தில் இருந்த பொருட்களை ஒப்படைக்குமாறு சபை செயலாளருக்குப் பணித்திருந்தேன்.

இதன்போது, செங்கோலும் தவறுதலாக என்னிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஏனெனில், அந்தச் செங்கோல் சபையின் பொருட்பதிவேட்டில் (Inventory) பதியப்பட்டிருக்கவில்லை. அதனை இன்று முறைப்படி செயலாளரிடம் ஒப்படைக்கச் சென்றிருந்தேன்.

எனினும், ஏற்கனவே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் அதனைப் பெற்றுக்கொள்ள முடியாது எனச் செயலாளர் மறுத்துவிட்டார். இதனால், அந்தச் செங்கோலை அதனைச் செய்தவரிடமே (தயாரிப்பாளரிடமே) மீண்டும் ஒப்படைத்துள்ளேன்.

முன்னாள் முதல்வரின் இந்த விளக்கம் குறித்து வவுனியா மாநகரசபையின் செயலாளரைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்த முயன்றபோதும், அவர் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை.

இருப்பினும், செயலாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன் ஒருகட்டமாக, வாக்குமூலம் வழங்குவதற்காக நாளை (புதன்கிழமை) பொலிஸ் நிலையத்திற்குச் சமூகமளிக்குமாறு முன்னாள் முதல்வருக்குப் பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணைகளின் பின்னரே இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.