அதிகரிக்கும் உயிரிழப்புகள் : பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்!!

34

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 32 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. அத்தோடு, இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 55,000-ஐத் தாண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் இயக்குநர் டாக்டர் கபில கன்னங்கரா தெரிவித்தார்.

ஜூன் மாதத்தில் மட்டும் 21,565 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இதில் அதிகபட்ச நோயாளிகள் மேற்கு மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் 11,392 நோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 11,006 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைச் சுத்தம் செய்ய மக்கள் இன்னும் முழுமையான நடவடிக்கைகளை எடுக்காததே இதற்குக் முக்கிய காரணம் என்று மருத்துவர் கூறினார்.

மேலும், எதிர்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், டெங்கு பெரும்பாலும் அரசு நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் பரவுவதால், பொதுமக்கள் அதன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என கபில கன்னங்கராவும் வலியுறுத்துகிறார்.