
புதிய இணைப்பு : நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 25 பேரில், 5 சிறை அதிகாரிகளும் 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மோதல் காரணமாக ஏற்பட்ட காயங்களுடன் சுமார் 100 பேர் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களில் 13 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஒன்பதாம் இணைப்பு : நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாக கைதிகள் முன்வாசல் வழியாக சிறையை விட்டு வெளியேற முயன்றதால், நிலைமையைக் கட்டுப்படுத்த அதிகளவு பொலிஸாருடன், சிறப்பு அதிரடிப் படையும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மேலும், துப்பாக்கிச்சத்தம் கேட்டதை அடுத்து, சிறைக்கைதிகளின் உறவினர்கள் குவிந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால், நிலைமையைக் கட்டுப்படுத்த சிறப்பு முயற்சி மேற்கொள்ளபட்டு வருகின்றது.
சம்பவ இடத்தில் நிலைமை தீவிரமடைந்து வருவதால் கட்டுப்படுத்த பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை, இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகளை வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

எட்டாம் இணைப்பு : நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரின் உடல்களில் துப்பாக்கிச்சூடு காயங்களும் கண்டறியப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பாதுகாப்பிற்காக இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளன.

ஏழாம் இணைப்பு : நீர்கொழும்பு சிறையில் இன்று காலை (06) மீண்டும் ஏற்பட்ட கலவரத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரின் உடல்களில் துப்பாக்கிச்சூடு காயங்களும் கண்டறியப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறைச்சாலையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதுடன், அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட ஒரு குழுவினர் சிறையை சுற்றி அமைதியற்ற முறையில் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறாம் இணைப்பு : இன்று காலை (06) நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் சிறை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் காயமடைந்த சுமார் 50 இற்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் நான்கு சிறை அதிகாரிகளும், நான்கு கைதிகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.
தற்போது சிறை வளாகத்திற்குள் நுழைந்துள்ள பொலிஸாரும், சிறப்பு அதிரடிப் படையினரும் மோதல் சூழ்நிலையை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், காயமடைந்த அதிகாரிகளும், கைதிகளும் இன்னும் சிறைக்குள் இருப்பதாகவும், அவர்களை மீட்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஐந்தாம் இணைப்பு : நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை (06) ஏற்பட்ட மோதலில் சிறை அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் காயமடைந்த சுமார் 50 இற்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப்படையினர் என்றும், பதற்றமான சூழலை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படையினர் பலமுறை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நான்காம் இணைப்பு : நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் மூவர் சிறை அதிகாரிகள் என்றும், ஒருவர் கைதி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஏராளமான அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும், காயமடைந்தவர்களில் சிறைக்கைதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், காயமடைந்த அதிகாரிகளும், கைதிகளும் இன்னும் சிறைக்குள் இருப்பதாகவும், அவர்களை மீட்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மூன்றாம் இணைப்பு : நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை (06) மீண்டும் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் இருவர் பாதுகாப்பு அதிகாரிகள் என்றும், மோதலில் காயமடைந்த சுமார் 35 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிலைமையைக் கட்டுப்படுத்த நீர்கொழும்பு பொலிஸார் மட்டுமின்றி, மிரிகம மற்றும் வெயங்கொட உள்ளிட்ட அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையும் களமிறக்கப்பட்டுள்ள4னர். மேலும், கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு : நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக பல சிறை அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைதிகளால் தாக்கப்பட்டு காயமடைந்த ஆறு சிறை அதிகாரிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலில் காயமடைந்த சுமார் 20 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
முதலாம் இணைப்பு : நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை (06) மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் சிறைச்சாலைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்தது.
விளக்கமறியலில் இருந்த கைதிகள் குழுவிற்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே இந்த மோதல் நடந்ததாக பொலிஸார் விளக்கமளித்திருந்தனர்.
இந்த மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 38 பேர் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பொலிஸாரின் தலையீட்டில் நேற்று நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று காலை மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





