
வவுனியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட இறம்பைக்குளம் வட்டாரத்தில், நிலவிவரும் கடுமையான வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக பனை மற்றும் தென்னை மரங்களில் திடீரென ஏற்பட்ட தொடர் தீ விபத்து, மாநகர சபை தீயணைப்பு பிரிவினரின் அதிரடி நடவடிக்கையால் குறுகிய நேரத்திற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இறம்பைக்குளம் பகுதியில் உள்ள பனை மற்றும் தென்னை மரங்களில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. தற்போதைய கடுமையான வறட்சி மற்றும் சூழல் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக தீ மிக வேகமாக பரவ ஆரம்பித்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. சம்பவம் குறித்து உடனடியாக வவுனியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

தகவலறிந்த தீயணைப்பு படையினர், தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயைக் குறுகிய நேரத்திற்குள் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் தீ அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிகளுக்கு பரவுவது தடுக்கப்பட்டு, பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வவுனியா மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார உறுப்பினர் ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டனர்.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் பிரிவினரின் விரைவான மற்றும் அர்ப்பணிப்புடனான செயல்பாட்டைப் பாராட்டிய முதல்வர், அப்பகுதி மக்களின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தற்போது நிலவி வரும் கடுமையான காலநிலை மாற்றம் மற்றும் வெப்ப அதிகரிப்பு காரணமாக, பொதுமக்கள் தீ விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் விழிப்புணர்வுடன் இருக்குமாறு இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.






