இலங்கையில் தீவிரமெடுக்கும் டெங்கு நோய் : தொடர்ந்து உயரும் உயிரிழப்புக்கள்!!

29

இலங்கையில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 65,034 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் 08 நாட்களில் மாத்திரம் 9,654 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரையில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள நோயாளர்களின் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 13,332 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 13,150 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 4,600 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 4,354 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொசு பெருகும் இடங்களை அழித்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.