இளம் பெண் வைத்தியர் கொலை விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!!

110

புதிய இணைப்பு : தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று(09.07.2026) மீண்டும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நால்வரும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு : தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் இன்று (09) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஆகியோரே இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், நுவரெலியா பொலிஸாவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நுவரெலியா நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவுகளின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வந்தனர்.

இதற்கமைய, சந்தேகநபர்களை ஜூன் (26) நுவரெலியா நீதிமன்ற நீதவான் முன் முன்னிலைப்படுத்திய பின்னர், இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

கடந்த 17 ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கார் ஒன்றில் இருந்து இளம் பெண் வைத்தியரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டமையாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் காதலர் எனும் கூறப்படும் நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.