கதிர்காம யாத்திரீகளுக்கு உணவு தயாரிக்க சென்றவருக்கு நடந்த துயரம்!!

129

பொத்துவில் – அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் வியாழக்கிழமை (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த வேன் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் காரைதீவு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், கதிர்காமப் பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்காக உகந்தை பகுதியில் உணவுகளைத் தயாரித்து வழங்கிய பின்னர், வீடு திரும்பும் வழியிலேயே விபத்தில் சிக்கியுள்ளார்.

அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேன், ஊரணி சந்திக்கு அருகில் சென்றபோது, எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியுள்ளது.

விபத்தின் வேகத்தினால் இரண்டு வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில், வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. இவ்விபத்தில் வேன் ஓட்டுநரும், முச்சக்கர வண்டி ஓட்டுநரும் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டுப் பொத்துவில் ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், வேன் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மேலதிக அவசர சிகிச்சைக்காகக் கல்முனை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொடர்ந்து பொத்துவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. விபத்துத் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.