யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதியினர் சென்னையில் அதிரடியாக கைது : சிக்கிய போலி ஆவணங்கள்!!

35

சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களை பயன்படுத்தி தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் இலங்கை செல்வதற்காக, சென்னை விமான நிலையம் சென்றபோது போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் (69) அவரது மனைவியும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இவர்கள் தியாகராயநகர் பகுதியில் சிறிய நகைக்கடையில் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்றி, போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் வாக்களித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் முடிவில், இவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று, தேர்தலிலும் வாக்களித்தமை உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், இருவர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் இலங்கையை சேர்ந்த பலர் முறைகேடாக வாக்களித்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், நேற்றும் இருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.