வவுனியா மாநகர முதல்வர் நீக்கத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ஓகஸ்ட் 7 வரை நீடிப்பு : மேல் நீதிமன்றம் உத்தரவு!!

72

வவுனியா மாநகர சபை முதல்வரைப் பதவியிலிருந்து நீக்கி ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (15.07.2026) உத்தரவிட்டுள்ளது.

வவுனியா மாநகர சபை முதல்வரின் பதவிகளை நீக்கி மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு, இன்று வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கின் பிரதிவாதிகளான மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான அரச சட்டவாதி தனது சமர்ப்பிப்புகளை முன்வைத்தார்.

பிரதிவாதிகளின் ஆட்சேபனைப் பதில்களைத் தயாரித்து நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு தற்போதைக்கு போதிய அவகாசம் இல்லாததால், அதற்கு மேலதிக கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

அத்துடன், கடந்த 3ஆம் திகதி மனுதாரருக்குச் சாதகமாக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணங்களை (தடையுத்தரவை) தாம் கடுமையாக எதிர்க்கப் போவதாகவும் அரச சட்டவாதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், பிரதிவாதிகள் தங்களது ஆட்சேபனைப் பதில்களை எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு, அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் மாநகர முதல்வரைப் பதவியிலிருந்து நீக்கிய ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு மன்றால் உத்தரவிடப்பட்டது.