திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணின் வீடு புகுந்து தடுக்க முயன்ற தாய் வெட்டிக் கொலை!!

13

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், திடீரென திருமணத்திற்கு பெண் மறுத்ததால், ஆத்திரத்தில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து மகளைத்

தாக்குவதைத் தடுக்க முயன்ற பெண்ணின் தாயாரை வாலிபர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வர்ஷா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜா என்ற இளைஞருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இந்தத் திருமணத்திற்கு வர்ஷா திடீரென மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த யுவராஜா, வர்ஷாவின் வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்து வர்ஷாவைத் தாக்க முயன்றுள்ளார்.

அப்போது மகளைக் காப்பாற்றுவதற்காக வர்ஷாவின் தாய் விநாயக ஜோதி ஓடி வந்து தடுத்துள்ளார். இதில் மேலும் ஆத்திரமடைந்த யுவராஜா, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விநாயக ஜோதியை ஓங்கி வெட்டியுள்ளார்.

யுவராஜா நடத்திய இந்த கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த தாய் விநாயக ஜோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தடுக்க முயன்ற மகள் வர்ஷாவிற்கும் இந்தத் தாக்குதலில் கடுமையான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயமடைந்த வர்ஷாவை மீட்டு, சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு, தப்பியோடிய யுவராஜா காரியாபட்டி காவல் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்தார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளி யுவராஜாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்த காரணத்திற்காகப் பெண்ணின் தாய் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.