ஒருதலைக் காதலால் கொடூரம் : இளம் பெண்ணை கொலை செய்த இளைஞன்!!

19

கர்நாடக மாநிலம் பண்ட்வால் அருகே ஒருதலைக் காதல் விவகாரத்தில், இளம் செவிலியர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையிலேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பண்ட்வால் பகுதியைச் சேர்ந்த லாவண்யா (25) என்ற இளம் பெண், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார்.

வழக்கம்போல் தனது பணியை முடித்துவிட்டு, ஊருக்குத் திரும்புவதற்காகப் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்த பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்துள்ளார்.

அப்போது, லாவண்யாவை நீண்ட நாட்களாக ஒருதலையாகக் காதலித்து வந்த வாலிபர் ஒருவர், திடீரெனப் பேருந்திற்குள் புகுந்து தான் மறைத்து வைத்திருந்த வாளால் அவரை வெட்ட முயன்றுள்ளார்.

வாலிபரின் கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பித்துத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் பயந்து நடுங்கிய லாவண்யா, அலறியடித்தபடி பேருந்திலிருந்து கீழே இறங்கிப் பொதுமக்களை நோக்கிக் ஓடியுள்ளார்.

இருப்பினும், விடாமல் துரத்திச் சென்ற அந்த வாலிபர், பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பலரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே லாவண்யாவை வாளால் கொடூரமாக வெட்டிச் சாய்த்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த லாவண்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொடூரக் கொலையை அரங்கேற்றிய அந்த இளைஞர், பேருந்து நிலையத்திற்கு வெளியே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறித் தப்பியோடிவிட்டார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த உள்ளூர் போலீஸார், லாவண்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பேருந்து நிலையப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய கொலையாளியைப் பிடிப்பதற்காகத் தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பகல் நேரத்திலேயே அரங்கேறிய இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.