
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளரினால் (இலங்கைத் தமிழரசுக்கட்சி) மக்கள் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்படுவதாக ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷனை நெளுக்குளம் பொலிசார் விசாரணைக்கு அழைத்துள்ள சம்பவம் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகப் பார்க்கப்பட்டுகின்றது.
பிரதேச சபையினால் நிதி வீண் விரையம் செய்யப்படுகின்றமை தொடர்பாக தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்ததற்காக, தவிசாளரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், 2026.07.21ம் திகதி நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷனுக்கு உத்தரவுப் பத்திரம் (Summons) வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தடுத்து, உண்மைகளை ஆவணங்களுடன் வெளிப்படுத்திய ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷனுக்கு எதிராக, தவிசாளர் பொலிசார் மூலம் நடவடிக்கை எடுக்க முயல்வது ஊடகங்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் ஒரு பழிவாங்கல் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகவியலாளர்களின் குரலை ஒடுக்க நினைக்கும் இச்செயல் வவுனியா அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் சபை நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஊடகவியலாளர் வெளிப்படுத்திய முக்கிய தகவல்களின் விபரம் இதோ :
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் பெறப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களின்படி,
1. பகிரங்க டெண்டர் இன்றி ஆயுட்கால சிசிடிவி (CCTV) ஒப்பந்தம்..
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் எவ்வித பகிரங்க பத்திரிகை விளம்பரங்களோ அல்லது திறந்த கேள்வி கோரல்களோ (Tenders) இன்றி, முற்றிலும் வாடகை அடிப்படையில் 50 சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
ஒப்பந்த விபரம் : சபைக்குட்பட்ட முக்கிய 25 இடங்களில், ஒரு இடத்திற்கு தலா இரண்டு கமராக்கள் வீதம் மொத்தம் 50 கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆயுட்கால ஒப்பந்தம் : இத்திட்டமானது ஆயுட்காலம் வரை (Lifetime Contract) என்ற நீண்டகால ஒப்பந்த அடிப்படையில், கொடிகாமம் மீசாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த ‘Microwin Hi-End (Pvt) Ltd’ என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
விதிமுறை மீறல் : பொது இடங்களில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்படுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்படவேண்டும் என்ற விதிமுறை உள்ள போதிலும், இத்திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை.
நிதி விரயம் : ஒரு கமராவுக்கான வாடகை மற்றும் இணையக் கட்டணம் உள்ளடங்கலாக 2,758 ரூபா வீதம், 50 கமராக்களுக்கும் சேர்த்து மாதாந்த வாடகை கட்டணமாக மொத்தம் 1,37,900 ரூபா சபை நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
மக்களின் கேள்வி : தற்போது சந்தையில் சாதாரண ஒரு சிசிடிவி கமராவின் விலை 30000 ரூபா முதல் 35000 ரூபா வரை விற்கப்படுகிறது. இந்த மாதாந்த வாடகைத் தொகையைக் கொண்டு, மாதமொன்றுக்கு தலா 4 புதிய கமராக்கள் வீதம் சபை நிதியிலேயே வாங்கியிருக்க முடியும்.
சில மாதங்களிலேயே அவை சபையின் சொந்த சொத்தாக மாறியிருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் மக்கள் பணம் வாடகை என்ற பெயரில் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றது.
2. தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதத்தில் 17 இலட்சம் செலவு.
சபையிடம் ஏற்கனவே போதுமான வாகன வசதிகள் இருக்கும் போது, தற்போதைய தவிசாளர் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி அதிக விலைக்கு வாடகை வாகனம் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுள்ளார்.
ஏற்கனவே உள்ள வாகனங்கள் : அதிகாரிகளினதும் தவிசாளரினதும் பயன்பாட்டிற்காக ஒரு ‘சிங்கிள் கப்’ (Single Cab) வாகனமும், ஒரு முச்சக்கர வண்டியும் உள்ளன. இது தவிர அரசாங்க அதிபரினால் மற்றுமொரு ‘டபிள் கப் பிக்கப்’ (Double Cab Pickup) வாகனமும் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய சொகுசு வாகன ஒப்பந்தம் : இவ்வாறான நிலையில், புதிய டொயோட்டா பிக்கப் (Toyota Double Cab Pickup) வாகனம் ஒன்றை மாதாந்த வாடகை 3,40,000 ரூபா (3000 கிலோமீட்டர் வரை) என்ற அடிப்படையில் ஓராண்டு காலப்பகுதிக்கு (2025.11.13 முதல் 2026.11.12 வரை) வாடகைக்கு அமர்த்தியுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைத் தாண்டினால் ஒரு கிலோமீட்டருக்கு 150 ரூபாய் மேலதிகக் கட்டணமாகும்.
செலவிடப்பட்ட தொகை : கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இந்த வாடகை வாகனத்திற்காக 17,24,750 ரூபா கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகன வாடகை ஒப்பந்தம் தொடர்பான எந்தவொரு விளம்பரமும் அல்லது கோரிக்கையும் பத்திரிகைகளில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. “அடிப்படைத் தேவைகளான வீதிகள், வடிகால்கள் மற்றும் மின்விளக்குகளைச் சீரமைக்க நிதியில்லை என்று கூறும் சபை, தவிசாளரின் தனிப்பட்ட தேவைக்கு மட்டும் மக்கள் பணத்தை வாரி இறைப்பது மக்கள் பணத்தினை விரயமாக்கும் செயல் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
3. வடமாகாண ஆளுநர் செயலகம் அதிரடி விசாரணைக்கு உத்தரவு.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மக்கள் நிதி பாரியளவில் விரயம் செய்யப்படுவதாகவும், பல்வேறு நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும் பொதுமக்கள் ஆதாரங்களுடன் வடமாகாண ஆளுநருக்குப் புகார் கடிதம் அனுப்பியிருந்தனர்.
இப் புகாரை ஆராய்ந்த கௌரவ வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, ஆளுநர் செயலகம் உடனடியாகச் செயற்பட்டுள்ளது. இதன்படி, 2026.05.29 அன்று ஆளுநர் செயலகத்தினால் (கடித இலக்கம்: G/NPC/A4/LG/COM/VA/26/A/15) வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து உடனடியாக முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு, பொருத்தமான சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவற்றினை மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய ஊடகவியலாளரின் ஊடக சுதந்திரத்தினை முடக்கும் வகையிலேயே தவிசாளரின் இவ் நடவடிக்கை அமைந்துள்ளது.






