
இந்தியாவின் தலை நகரான புதுடெல்லியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் மீது கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறி கழன்று விழுந்தது. மூன்று மணி நேரத்தில் அந்த நோயாளி உயிரிழந்ததால் பரபரப்பு உருவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் புதுடெல்லியிலுள்ள குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில், முகம்மது அக்பர் (42) என்னும் நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் இரத்த அழுத்தம், மூளை வீக்கம் மற்றும் நுரையீரல் பிரச்சினை ஆகிய பிரச்சினைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அக்பர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவிலுள்ள படுக்கை ஒன்றில் படுத்திருக்க, திடீரென கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறி கழன்று அவர் மீது விழுந்துள்ளது.
சுமார் மூன்று மணி நேரத்தில், அதாவது, அதிகாலை 12.16 மணிக்கு அக்பர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அக்பர் குடும்பத்தினர் அவரது மரணம் தொடர்பில் விசாரணை கோரியுள்ளனர்.
இதற்கிடையில், அக்பர் உயர் இரத்த அழுத்தம், மூளை வீக்கம் மற்றும் நுரையீரல் பிரச்சினை ஆகிய காரணங்களால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.





