வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஊடக சந்திப்பு!!

21

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சபையின் நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிராந்திய ஊடகவியலாளர் பா.கதீசன் செய்தி வெளியிட்டிருந்தார்.

இச்செய்தியானது சபைக்கும், தனக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி, இலங்கைத் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளரினால் ஊடகவியலாளர் பா.கதீசனுக்கு எதிராக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் அமர்வு இன்று நடைபெற்றது. அமர்வின் நிறைவில், ஊடகவியலாளரால் வெளியிடப்பட்ட நிதி வீண்விரயம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தெளிவுபடுத்தல் வழங்கும் வகையில் தவிசாளரினால் ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஊடக சந்திப்பில் பிரதேச சபையின் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும், தேசிய மக்கள் சக்தியைச் (NPP) சேர்ந்த 6 சபை உறுப்பினர்கள் இந்த ஊடக சந்திப்பைப் புறக்கணித்து கலந்து கொள்ளவில்லை. அத்துடன் ஏனைய சில உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.