
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பூ சந்திக்கு அருகில் இடம்பெற்ற லொறி விபத்தில், அதில் பயணித்த இருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (22) சுமார் 11.00 மணியளவில், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லியப்பூ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதிலில் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் அவசர சேவைப் பிரிவினர் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, லொறியில் சிக்கியிருந்த இருவரையும் மீட்டு டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
லொறி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை மயக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், விபத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறியும் நோக்கில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.





