தென்னிலங்கையில் டெங்கு பரிசோதனைக்காக சென்ற அதிகாரிகளிடம் சிக்கிய துப்பாக்கி : பெண் கைது!!

112

பத்தரமுல்லலையில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட சோதனை மற்றும் கள ஆய்வின்போது துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்து பத்தரமுல்லை, பெலவத்தவில் உள்ள ஒரு வளாகத்தில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போது, ​​அசுத்தமான நிலையில் இருந்த ஒரு வீட்டில், உயிருள்ள கொசுப் புழுக்களுடன் ஒரு செயல்படும் துப்பாக்கியையும் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையானது, பத்தரமுல்ல சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார ஆய்வாளர்களால், பொலிசார், இராணுவம், விமானப்படை மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது.

அதிக எண்ணிக்கையிலான நாய்களுடன் மிகவும் அசுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது குறித்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. பின்னர் பொலிசார் அதனைப் பறிமுதல் செய்து, அந்த வீட்டின் உரிமையாளரான ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

மேலும், உயிருள்ள கொசுப் புழுக்கள் இருந்த மற்றொரு வளாகத்தை ஆய்வு செய்தபோது, ​​அதன் உரிமையாளர் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொசுப்புழுக்கள் உள்ள இடங்களைப் பராமரித்து வந்த 13 நபர்கள் மீது கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை உடனடியாக அழிக்குமாறும், கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தேவையான உதவியை வழங்குமாறும் சுகாதாரத் துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.