நாட்டை உலுக்கிய கொள்ளைக் கும்பல் : PickMe சாரதி கொலை வழக்கில் திருப்பம்!!

18

நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரையும், அவரது மகனையும் ஹோமகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக முன்னர் பணியாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் தனது மகனுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 16ஆம் திகதி அதிகாலை ஹோமகம, கலகஹேன பகுதியில் உள்ள கால்வாயொன்றில் இருந்து வாடகை மோட்டார் சைக்கிள் சேவையில் (PickMe) ஈடுபட்டிருந்த சாரதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

கொலை செய்யப்பட்ட சாரதியின் மோட்டார் சைக்கிள், தங்க நெக்லஸ், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியனவும் கொள்ளையிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உயிரிழந்த PickMe சாரதி மற்றொருவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அந்த நபரே சாரதியைக் கொலை செய்திருந்ததாகவும், பின்னர் அவர் மற்றும் அவரது தந்தை இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

விசாரணைகளின்படி, கொலை இடம்பெற்ற மறுநாளே, சந்தேகநபர்கள் உயிரிழந்த சாரதியின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி மொரகஹஹேன பகுதியில் பெண்ணொருவரை கூர்மையான ஆயுதங்களால் அச்சுறுத்தி அவரது தங்க நெக்லஸை கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஹோமகம, அவிசாவளை, கிரியுல்ல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளில் இடம்பெற்ற நான்கு தனித்தனி ஆயுதக் கொள்ளைச் சம்பவங்களுடனும் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஹோமகம, பிட்டிபன பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகநபர் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், முன்னாள் இராணுவ அதிகாரியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டொன்றும், 500 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல்சர் ரக மோட்டார் சைக்கிளும், இரத்தக்கறை படிந்திருந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசமொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமகம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.