
வன்னி மாவட்ட கல்விசார் உத்தியோகத்தர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் (EDCS) புதிய கிளை அலுவலகம் வவுனியாவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா நகரின் 2ஆம் குறுக்குத் தெருவில், வைரவர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்நிலையத்தை, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் உயர்மட்ட உத்தியோகத்தர்கள் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தனர்.

இதுவரை காலம் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் கல்விசார் உத்தியோகத்தர்களும், தமது கூட்டுறவுச் சங்கம் சார்ந்த சேவைகளைப் பெறுவதற்காகக் கிளிநொச்சி மாவட்டத்திற்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் அவர்களுக்கு பண விரயமும் நேர விரயமும் ஏற்பட்டு வந்தது.

தற்போது வவுனியாவில் இக்கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் மூலம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த கல்விசார் ஊழியர்கள் பயன்பெறுவர்.

கடன் விண்ணப்பங்கள், சேமிப்புகள் மற்றும் ஏனைய நிதிச் சேவைகளைத் தமது சொந்த மாவட்டத்திலேயே விரைவாகவும் இலகுவாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

இப்புதிய கிளை அலுவலகத்தின் வருகையானது வன்னி மாவட்ட கல்விச் சமூகத்திற்கு பெரும் வரப்பிரசாதமாகவும், அவர்களின் அன்றாடச் சிரமங்களைக் குறைக்கும் முக்கிய சேவை மையமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






