வவுனியாவில் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!!

274

வவுனியாவில் செயற்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு, அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக இரத்தப் பரிசோதனைக்கான கட்டணம் அறவிட்டமை தொடர்பில் ரூ. 5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தகவல்களின் படி, Full Blood Count (FBC) இரத்தப் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் ரூ. 400 என நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த மருத்துவமனை ரூ. 550 அறவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA) அதிகாரிகள் கடந்த ஜூலை 14ஆம் திகதி மேற்கொண்ட விசாரணையின் போது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த வவுனியா நீதவான் நீதிமன்றம், ஜூலை 28ஆம் திகதி ரூ. 5 இலட்சம் அபராதம் விதிக்கும் உத்தரவை பிறப்பித்தது.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை மீறி மருத்துவமனைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்கள் கட்டணம் அறவிடுவதாக சந்தேகம் ஏற்பட்டால், பொதுமக்கள் அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.