வவுனியா ஏ9 வீதியில் கோர விபத்து : இரண்டு யாழ். இளைஞர்கள் பரிதாபமாக பலி!!

680

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

தம்புள்ளையிலிருந்து பருத்தித்துறை நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக பாரவூர்தி (Lorry) ஒன்று, புற்குளச்சந்திக்கும் பெரியகுளத்திற்கும் இடைப்பட்ட கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

ஓட்டுநரின் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் பலமாக மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் பாரவூர்தியில் பயணித்த 25 வயதுடைய இரண்டு இளைஞர்களும் படுகாயமடைந்தனர். உடனடியாக மீட்டெடுக்கப்பட்ட இருவரும் தீவிர சிகிச்சைக்காக மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரும் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் பிறந்த இந்த இளைஞர்கள், தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதே இந்தச் சோகமான சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இளவயதிலேயே குடும்பத்திற்காக உழைக்கச் சென்று உயிரைவிட்ட இச்சம்பவம், அவர்களின் குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் மீளாத துயரத்தையும் பெரும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.