நீர்கொழும்பில் கோர விபத்தில் பலியான இளைஞர்கள் : மூன்று பேர் கைது!!

111

நீர்கொழும்பு – கட்டானா பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் அருகில் (30) திகதி அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை 1.45 மணியளவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.

இந்த விபத்தில் நீர்கொழும்பு, தாகொன்ன வீதியைச் சேர்ந்த 18 வயதான சிரிவர்தன ஆராச்சிலாகே தலிஷ் நிம்நெத் சிரிவர்தன மற்றும் 19 வயதான விஜேசுந்தர அப்புஹாமிலாகே கவிந்து ஹஷான் சோமதிலக ஆகிய இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்துக்கு காரணமானதாக கூறப்படும் கண்டெய்னர் லொறிக்கு தீ வைத்துள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை மற்றும் விபத்து நடந்த பகுதியின் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில், கொள்கலன் லொறிக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு மற்றும் கிம்புலபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 20, 25 மற்றும் 26 வயதுடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (31) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய கண்டெய்னர் லொறியின் சாரதியான பன்னில – தென்ன பகுதியை சேர்ந்தவரை கட்டான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதே பகுதியில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.