
நுவரெலியா – பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல்போயிருந்த நால்வரின் சடலங்களும் (03) ஆம் திகதி இரவு மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி, பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். காணாமல்போயிருந்த பெண் ஒருவரின் சடலத்தை 19 ஆவது தேசிய பாதுகாப்பு படைப்பிரிவின் சிப்பாய்கள் மீட்டிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து பொல்பிட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து (03) ஆம் திகதி இரவு மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் மூலம் ஏனைய 3 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
(03) ஆம் திகதி பிற்பகல் 1:30 மணியளவில் பொல்பிட்டிய பகுதியில் பெய்த பலத்த மழையினால் குறித்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாகவும், அவ்வீட்டில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நால்வரும் மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், உறவினர் வீட்டிற்கு வருகை தந்திருந்த வேளையிலேயே இந்த அசம்பாவிதத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்றும் பொல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.





