34 ஆண்டுகள் அயராத அர்ப்பணிப்பு : ஓய்வுபெறும் யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா!!

33

34 ஆண்டுகள் மக்காளுக்கு மருத்துவ பணியாற்றிய யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா இன்று ஓய்வு பெறுகின்றார். இன்னிலையில் ஓய்வு பெற்று செல்லும் மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா தொடர்பில் , யாழ் போதனா வைத்தியசாலை பணைப்பாளர், மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி முகநூலில் பதிவிட்டுள்ளதாவது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை என்பது வடக்கு மக்களின் நம்பிக்கையின் சின்னம் மட்டுமல்ல; எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றிய மனிதநேயத்தின் ஆலயமாகவும் திகழ்கிறது.

குறிப்பாக யுத்தம் நிலவிய காலங்களில், குண்டுவெடிப்புகள், இடம்பெயர்வுகள், மருந்து மற்றும் உபகரணப் பற்றாக்குறைகள், மின்சாரத் தட்டுப்பாடுகள் போன்ற எண்ணற்ற சவால்களுக்கு மத்தியில் கூட, இந்த வைத்தியசாலை தனது சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை.

அந்த மகத்தான சேவையின் பின்னணியில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் அர்ப்பணிப்பே இருந்தது.

உண்மையில், இவ்வாறான ஒவ்வொரு சேவையாளரும் சமூகத்தின் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்களே. அவ்வாறான அர்ப்பணிப்புமிக்க சேவையாளர்களில் ஒருவர் தான் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள்.

யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரான அவர், கடந்த 34 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

தனது பணிக்காலம் முழுவதும், குறிப்பாக யுத்தம் நிலவிய காலங்களிலும் அதன் பின்னரும், சத்திர சிகிச்சைக் கூடத்தில் சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாகவும், மயக்கமருந்தியல் பிரிவிலும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றினார்.

உயிருக்கும் மரணத்துக்கும் இடையில் போராடிய ஆயிரக்கணக்கான நோயாளிகளின் சிகிச்சையில் அவரது பங்களிப்பு அளப்பரியது. அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பயிற்சி பெற்ற காலங்களில்,

அவர்களில் பலருக்கு வழிகாட்டியாகவும், மருத்துவமனை நடைமுறைகள், ஒழுக்கம் மற்றும் தொழில்முறைப் பண்புகளை பொறுமையுடனும் அன்புடனும் கற்பித்த சிறந்த மூத்த மருத்துவ அதிகாரியாகவும் திகழ்ந்தார்.

இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் சேவையாற்றும் பல வைத்தியர்களின் நினைவில் அவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இன்று நடைபெற்ற அவரது ஓய்வுபெறும் பாராட்டு விழாவில், அவருடன் பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பலரும் அவரது தொழில்முறைத் திறமை,

அமைதியான குணம், அன்பான அணுகுமுறை, மனிதநேயம் மற்றும் பொறுப்புணர்வை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து பாராட்டினர். அவருடைய பாடசாலை நண்பர்கள் அவரை அன்புடன் “குட்டி” என்று அழைப்பார்கள்.

செல்லப்பெயரிலேயே அவரது எளிமை, நட்புணர்வு மற்றும் பாசம் பிரதிபலிக்கின்றன. அதேபோல், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அவருடன் கடமையாற்றிய பல மருத்துவர்கள்

அவரை அன்போடும் மரியாதையோடும் “ஸ்ரீ அண்ணன்” என்று அழைப்பது, அவர் அனைவரிடமும் ஏற்படுத்திய நம்பிக்கை, பாசம் மற்றும் சகோதரத்துவ உறவிற்கு ஒரு சிறந்த சான்றாகும்.

பதவியால் மட்டுமல்ல, தனது பணிவு, வழிகாட்டுதல் மற்றும் அன்பான அணுகுமுறையால் இளைய மருத்துவர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு மூத்த சகோதரராகவே அவர் விளங்கினார்.

உண்மையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பெருமை அதன் கட்டிடங்களிலோ அல்லது மருத்துவ உபகரணங்களிலோ மட்டுமல்ல; அதன் ஒவ்வொரு சேவையாளரின் அர்ப்பணிப்பிலும் இருக்கிறது.

இவ்வாறான அமைதியாகவும் ஆரவாரமின்றியும் கடமையாற்றிய மருத்துவ அதிகாரிகளே ஒரு நிறுவனத்தின் உண்மையான பலம். அவர்கள் உருவாக்கிய சேவை மரபும் மனிதநேயமும் எதிர்கால தலைமுறைகளுக்கு என்றும் வழிகாட்டும் ஒளியாக இருக்கும்.

அன்பிற்குரிய டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா ! தங்களின் 34 ஆண்டுகால அர்ப்பணிப்பான சேவைக்கு வடக்கு மக்களின் சார்பிலும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக் குடும்பத்தின் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், குடும்ப மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் இறைவனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துகிறோம். “ஒரு நல்ல மருத்துவர் நோயாளிகளை மட்டும் குணப்படுத்துவதில்லை; மனிதர்களின் இதயங்களையும் வென்று விடுகிறார்.

அந்த அரிய பெருமைக்குரியவர் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் என , யாழ் போதனா வைத்தியசாலை பணைப்பாளர், மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளார்.