சீரற்ற காலநிலை காரணமாக 8 பேர் உயிரிழப்பு : ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு!!

11

இலங்கையில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து 14 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் உள்ள 56 பிரதேச செயலகப் பிரிவுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள 20 நிவாரண முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 195 பேரும், உறவினர் வீடுகளில் 224 பேரும் தங்கியுள்ளனர்.

மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பிரதான வீதிகளில் ஏற்பட்ட தடங்கல்கள், மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்கள் மற்றும் மண்மேடுகள் சரிந்தமை போன்ற காரணங்களால் தடைப்பட்டிருந்த முக்கிய போக்குவரத்துப் பாதைகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறிப்பாக, கடுகண்ணாவ பகுதியில் மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி வீதி மீண்டும் திறக்கப்பட்டு, போக்குவரத்து முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது.

எனினும், நுவரெலியா – பதுளை, நுவரெலியா – ஹட்டன் மற்றும் நுவரெலியா – கண்டி (டொப்பாஸ் முதல் லபுக்கலை வரை) பிரதான வீதிகளில் அடர்ந்த மூடுபனி நிலவுவதால், சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

களனி மற்றும் களு கங்கை ஆற்றுப் படுகைகளுக்காக விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ஆறுகளின் நீர்மட்டம் சீரான நிலையை எட்டியுள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நீரியல் மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவு தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது என்று நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரிய பண்டார தெரிவித்தார்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் மலைப்பாங்கான பிராந்தியங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுகின்றது. அதற்கமைய, கண்டி (கங்கா இஹல கோரளை, உடுதும்பர, பச்பாகே கோரளை), கேகாலை (எட்டியாந்தோட்டை), நுவரெலியா (அம்பகமுவ, நோர்வூட்) ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாம் நிலைச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்,

அப்பகுதி மக்களை உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.