அதிகாலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள் : வெளியான சிசிடிவி காட்சி!!

18

கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் சொகுசுப் பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதிகாலை முகமூடி அணிந்த இருவர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் இச்சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்திற்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை கண்டு, அருகில் இருந்த மற்றொரு பேருந்திலிருந்த ஓட்டுநரும் நடத்துனரும் கூச்சலிட்டுள்ளனர். இதன்போதே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், தீ வைக்கப்பட்ட பேருந்திற்குள் ஓட்டுநரும் நடத்துனரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மற்றைய பேருந்திலிருந்த சகாக்களின் கூச்சலைக் கேட்டு அவர்கள் பேருந்திலிருந்து வெளியே குதித்து உயிர்தப்பியுள்ளனர்.

நெடுஞ்சாலை வழியாக கடுவெல – மாத்தறை இடையே இயக்கப்படும் சொகுசுப் பேருந்திற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், தீயினால் பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், குறித்த பேருந்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல – கொள்ளுப்பிட்டி சாதாரண சேவை பேருந்துகள் இரண்டும் தீயினால் லேசான சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

தனிப்பட்ட பகை காரணமாகவே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.