வவுனியா இறம்பைக்குளம் சேமக்காலையில் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு : பொலிசில் முறைப்பாடு!!

66

வவுனியா இறம்பைக்குளம் சேமக்காலையில் மரணமடைந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்கு இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 2ஆம் திகதி மரணமடைந்த தமது தந்தையாரின் உடலை அடக்கம் செய்யவே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் உறவினர்கள், இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த 30 வருடங்களாக குறித்த ஆலயப் பங்கில் வசித்து வரும் நாங்கள், ஆலயத்தின் நிதியுதவிகள், பூசைகள் மற்றும் அனைத்து நிகழ்வுகளிலும் தொடர்ச்சியாகப் பங்களிப்பு செய்து வருகிறோம்.

இருப்பினும், சேமக்காலை நிர்வாகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் எங்களது சாதி குறித்து வினவி, அடக்கம் செய்வதற்கு இடம் தர மறுத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவம் குறித்து சேமக்காலை நிர்வாக தரப்பிடம் வினவியபோது, அருகிலுள்ள இராணுவ முகாம் அதிகாரிகள் அனுமதி வழங்காத காரணத்தினால் புதிதாக உடல்களை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லை எனக் குறிப்பிட்டனர்.

எனினும், இக்கூற்றை மறுத்துள்ள பகுதி பொதுமக்கள், சேமக்காலையில் போதிய இடம் இருப்பதாகவும், புதிய குழிகளுக்குத் தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருசாரார் குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கிப் பாகுபாடு காட்டுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இம்முறைப்பாட்டினை அடுத்து, இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் நிர்வாகத்தினரை நாளை காலை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு வவுனியா பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.