வவுனியாவில் விபத்தை ஏற்படுத்திய பிரபல பேருந்தின் உரிமையாளர் கைது : சாரதி ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியமை அம்பலம்!!

278

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில், பிரபல பேருந்தின் உரிமையாளர் நேற்று (04.08.2026) புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி இடம்பெற்ற வீதி விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதியைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் ‘ஐஸ்’ (Crystal Meth) எனும் வீரியமிக்க போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளில், குறித்த சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரமும் (Driver’s License) ஏற்கனவே காலாவதியாகியிருந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்த மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய நபருக்குப் பேருந்தைச் செலுத்த அனுமதி அளித்த குற்றத்திற்காக, பொலிசார் சட்ட நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினர்.

இதன் அடிப்படையில், குறித்த பிரபல பேருந்தின் உரிமையாளர் நேற்று புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.