வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் : இடைக்காலத் தடை செப்டம்பர் 9 வரை நீடிப்பு : மேல் நீதிமன்றம் உத்தரவு!!

267

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்து ஆளுநர் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைக் கட்டளையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முதல்வரின் பதவி நீக்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இருதரப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

முதல்வருக்கு சார்பாக வழங்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குமாறு பிரதிவாதிகள் தரப்பில் ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு மனுதாரர் சார்பில் நேற்றைய தினம் மறுஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டது.

இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது இரத்து செய்வதா என்பது குறித்தே இன்றைய முழுநாள் விவாதமும் அமைந்திருந்தது. இறுதியில், இருதரப்பு விவாதங்களையும் எழுத்து மூல சமர்ப்பணமாக மன்றில் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 28 (அல்லது அதற்கு முன்) இருதரப்பினரும் தமது எழுத்து மூல சமர்ப்பணங்களை நீதிமன்ற அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதுடன் இடைக்காலத் தடை தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு அறிவிக்கப்படும்.

இந்த உத்தரவு வெளியான பின்னரே பிரதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதால், செப்டம்பர் 9 ஆம் திகதி வரை ஆளுநரின் பதவி நீக்க தீர்மானத்திற்கான இடைக்காலத் தடை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.