வவுனியாவில் விசேட சோதனை : அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய 2 சொகுசுப் பேருந்துகள் பொலிசாரால் கைப்பற்றல்!!

185

வவுனியா மாவட்டத்தில் உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த பேருந்துகளைக் கண்டறிந்து சட்டநடவடிக்கை எடுப்பதற்காக விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சட்டவிரோதமாகச் சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரனின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்நடவடிக்கை இடம்பெற்றது.

இதில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பறக்கும் படைகள் மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து செயற்பட்டனர்.

பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களைப் பரிசோதித்து, விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதே இந்நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

இதன்போது உரிய அனுமதிப்பத்திரமின்றிச் சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் கண்டறியப்பட்டு, பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

பேருந்துகள் கைப்பற்றப்பட்டதால் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் குறைக்கும் வகையில் உடனடியாக மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இருப்பினும், திடீரெனச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள் கணிசமான அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இதேவேளை, கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த மேலும் ஐந்து பேருந்துகளிடம் உரிய வழித்தட அனுமதிப்பத்திரங்கள் இல்லாத காரணத்தால், சோதனையிலிருந்து தப்பிக்கும் பொருட்டு அவை வவுனியாவுக்குள் நுழைவதைத் தவிர்த்து மதவாச்சி பகுதியிலேயே தங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனுமதியின்றி இயங்கும் இவ்வாறான பேருந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் வரை அவற்றை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படும்.

தற்போதைய சூழலில் பயணிகளின் தேவையை ஈடுசெய்யப் போதுமான மாற்றுப் பேருந்துகள் இல்லாததையும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் கருத்திற்கொண்டு, இந்த விசேட நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், அனுமதிப்பத்திரமின்றி இயங்கும் பேருந்துகளுக்கு எதிரான சட்ட நடைமுறைப்படுத்தல் நடவடிக்கை கைவிடப்படவில்லை என்றும், மேலும் ஒரு விசேட சோதனை நடவடிக்கை மிக விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

எனவே, தற்போது உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றிச் சேவையில் ஈடுபட்டு வரும் அனைத்து பேருந்து உரிமையாளர்களும் இயக்குநர்களும் உடனடியாக அவ்வாறான சேவைகளை நிறுத்தி, தேவையான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், சட்ட திட்டங்களை முழுமையாகப் பின்பற்றி செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்களுடன் மட்டுமே சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பானதும் தடையற்றதுமான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்த ஒத்துழைக்குமாறும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.