வவுனியாவில் வீடு முற்றாக தீக்கிரை : பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் நாசம்!!

373

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் இன்று (19.08.2026) அதிகாலை இடம்பெற்ற திடீர் தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி நாசமாகியுள்ளன.

குறித்த சம்பவமானது இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேப்பங்குளம் காளிகோவிலுக்கு முன்பாக உள்ள வீடொன்றில் தீப்பிடித்து எரிவதைக் கண்ட அயலவர்கள் உடனடியாகச் செயற்பட்டதுடன், வவுனியா மாநகரசபை தீயணைப்புப் படையினருக்கும் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் வாகனத்தின் உதவியோடும், அயலவர்களின் தீவிர முயற்சியோடும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் எவரும் இல்லாதிருந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.  இச் சம்பவம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.