
அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறித் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, நேற்று(18.08.2026) அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக செயற்பட்டு வந்த குறித்த நபர் ,
அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரைத் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துத் தன்னைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குறித்த பெண் அண்மையில் முகநூல் நேரலை ஊடாக நியாயம் கேட்டிருந்தார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் அப்பெண் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது, அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவு
அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சட்ட நடவடிக்கைகளுக்காக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில், அவரை ஒகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.





