காதலனுக்கு ஐபோன் பரிசு கொடுக்க தாத்தாவைக் கொன்ற 13 வயது பேத்தி!!

22

கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஆடம்பர ஆசைகளுக்காக 67 வயது முதியவரான சிவன்குட்டி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 வயது பேத்தி தனது 17 வயது காதலனுக்குப் புதிய பைக் மற்றும் ஐபோன் வாங்கித்தர ஆசைப்பட்டுள்ளார். இதற்காக வீட்டில் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

முதியவர் சிவன்குட்டி வீட்டில் தனியாக இருந்தபோது, பேத்தியின் காதலனும் அவளது இரு நண்பர்களும் (சிறார்கள்) வீட்டிற்குள் புகுந்து அவரைப் படுகொலை செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது பேத்தி வீடியோ காலில் இணைப்பில் இருந்து கொலையை வழிநடத்தி ஒருங்கிணைத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையைத் தொடர்ந்து, முதியவரின் வீட்டிலிருந்த பல சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சிறுவர்கள், அவற்றைக் குறைந்த விலைக்கு விற்று ஆடம்பரப் பொருட்களை வாங்க முயன்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய ஆலப்புழா காவல்துறையினர், கொலைக்கு உடந்தையாக இருந்த 13 வயது பேத்தி, அவளது 17 வயது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் உட்பட மொத்தம் 4 சிறார்களைக் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர்.