யாழில் திருவிழாவுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி : இதுவரையில் 157 பேர் வைத்தியசாலையில்!!

96

புதிய இணைப்பு : பண்டத்தரிப்பு ஆலயத்தில் பொருத்தப்பட்ட சீன மின் விளக்குகள் பொலிஸாரால் பறிமுதல்

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய(20) ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்,

ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.

கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு,

பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.

மூன்றாம் இணைப்பு : யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் அதிகளவு ஒலி காரணமாக கண் பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு,

அங்கு சிகிச்சை மற்றும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் இரு மாணவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளதுடன்,

அவர்கள் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனியான விடுதியொன்று ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போது ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும், சிறுவர்கள் 55 பேரும் என மொத்தம் 157 பேர் கண் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கண் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும் அனைவரும் தாமதமின்றி உடனடியாக வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், சுகாதார சேவைகள் பணிமனை, பொலிஸார், பிரதேச செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இரண்டாவது இணைப்பு : பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது இடம்பெற்ற அதிகளவிலான வாணவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பாடு காரணமாக பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் எம். மலரவன் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.

️கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம்.

உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறும், தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

️ குறிப்பாக நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனமாக அவதானிக்க வேண்டும். கண்களை தேய்க்க வேண்டாம்.

சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம். சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.

“கண் பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுங்கள்” – வைத்தியர் எம். மலரவன் இந்த அறிவிப்பை அதிகமானவர்களுக்கு பகிர்ந்து,

பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்துவோம்.

வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம்,பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதால்,

சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார் 120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோயாளிகளின் எண்ணிக்கை

இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுமார் 60 பேரும், ஆண்கள் 50-க்கும் மேற்பட்டோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளை நாடி வருவதால், நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. “பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம்.

அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆலயத் திருவிழா

மேலும், ஆலயத் திருவிழாவின் போது மின் இணைப்புகளை வழங்கியதாகக் கூறப்படும் சிலர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இதேபோன்று நவாலி அந்திரான் பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போதும் வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்,

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆலய நிர்வாகங்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, அதிகளவிலான பட்டாசு மற்றும் வாணவேடிக்கை, அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பை விட எந்தவொரு திருவிழா கொண்டாட்டமும் முக்கியமானதல்ல எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஆலய நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் சுமார் 35 பேருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலய வளாகம் பல்வேறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பார்வை பிரச்சினை

இந்நிலையில், அதிகளவில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்குகளின் ஒளியால் நேற்று ஆலயத்திற்கு சென்றவர்களில் சுமார் 35 பேருக்கு கண் பார்வை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்ற அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளனர்.