
மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, வீதியோரத்தில் இருந்த மாணவர்கள் குழுவினரையும் மோதியதில் பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று (22.08.2026) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார். சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 சிறுமிகளும் 2 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு சுமார் 9.21 மணியளவில், கோட்டைக்கல்லாற்றில் நான்கு இளைஞர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மட்டக்களப்பு – கொட்டக்கார் வீதியில் பயணித்துள்ளனர்.
கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் வைத்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் சம்பந்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை கடப்பதற்காக காத்திருந்த மூன்று மாணவர்கள் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மூன்று மாணவர்கள், மேலதிக வகுப்புகள் முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கியுள்ளனர். படுகாயமடைந்த சிறுமி ஒருவரின் ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் 18 வயதான கிஷோன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் 6 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 17 வயதான கதிர்சன் என்ற சிறுவன் இன்று (22) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.





