நிலவும் அதிக வெப்பம் : ஏற்படவுள்ள அபாய நிலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

16

உலர் வலயத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மொனராகலை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள சில நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு தற்போது 30 சதவீதத்தை விடவும் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் 74 பிரதான நீர்த்தேக்கங்களின் ஒட்டுமொத்த நீர் கொள்ளளவு 36 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் வறண்ட வானிலை நிலவியபோதிலும், இந்த ஆண்டில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக அந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.

அத்துடன் நிலவும் அதிக வெப்பம் காரணமாக குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் வேகமாக ஆவியாகி வற்றிப்போதல் இடம்பெறுகிறது. இந்த நிலைமையின் கீழ் நீர் தேவை அதிகரிக்கும் அதேவேளையில், நீர்வளம் வேகமாகச் சுருங்கி வருகிறது.

இதனால் கடும் வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் குடிநீர் தேவை மற்றும் சுற்றாடல் தேவைகளுக்காக நீரை ஒதுக்கீடு செய்ய நேரிடுவதால், விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை விநியோகிப்பது கடினமாக அமையக்கூடும்.

குடிநீர் விநியோகம் இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை என்றபோதிலும், சில பகுதிகளுக்கான விவசாயத்திற்காக விநியோகிக்கப்படும் நீரின் அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சவாலான நிலைமையை எதிர்கொள்வதற்கான ஒரே மாற்று வழி, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் சுற்றாடலுக்கு இணக்கமாக வாழ்வதும் ஆகும்.

நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும் என்பதுடன், அது மிக வேகமாகப் பரவும் அபாயமும் காணப்படுகிறது.

எனவே இது குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அவர் பொது மக்களை எச்சரித்துள்ளார்.