சிறைச்சாலையில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிருடன் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

23

வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலையினுள் இறந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் உயிருடன் வீட்டிற்கு வந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குருநாகல் – கல்கமுவ, கோகோபன்குளம் கிராமத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸாரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இறுதிக்கிரியைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இறந்ததாக கூறப்பட்டவர் தனது இறுதிக்கிரியைக்கு உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார். கோகோபன்குளம், கல்கமுவ பகுதியைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவர் நேற்று (24) திடீரென தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

கிராமம் முழுவதும் இறுதிக்கிரியைக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, இறுதிச்சடங்கு மற்றும் தகனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த நிலையில், கீர்த்திசேன உயிருடன் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளமை குழப்பத்தினையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறைச்சாலை மற்றும் அதிகாரிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.