
காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நடந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அம்பலன்வத்தையிலிருந்து கராப்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், எதிரே கராப்பிட்டியவிலிருந்து அம்பலன்வத்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது முச்சக்கரவண்டியின் பின்னாசனத்தில் பயணித்த கனம்பிட்டியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஹீன்பந்தலையைச் சேர்ந்த 49 வயதுடைய ஆண் பலத்த காயங்களுடன் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
அம்பலன்வத்தையிலிருந்து கராப்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில் மோதியதோடு, மோட்டார் சைக்கிளுடனும் மோதியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காலி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





