கையடக்க தொலைபேசி வெடித்து 19 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

55

மட்டக்களப்பு – கல்குடா, கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (27( மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாசிக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்குடா,கருங்காலிச்சோலை வீதியைச்சேர்ந்த 19 வயதுடைய கமலேஸ்வரன் சங்கீதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று மாலை வீட்டில் உறங்குவதற்கு சென்ற நிலையில், கையடக்க தொலைபேசியை மின்சாரத்தின் ஊடாக சார்ஜ் செய்து கையடக்க தொலைபேசியை நெஞ்சில் பகுதியில் வைத்து உறங்கியுள்ளார். இதன்போது கையடக்க தொலைபேசி சூடாகி வெடித்து தீப்பற்றியெரிந்துள்ளது.

இதன் காரணமாக படுகாயமடைந்த இளைஞரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.