நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 472 பேர் பலி : 1535 பேர் காணாமல் போனதாக தகவல்!!

100

நேபாளம் – சீன எல்லைப் பகுதியில் இமயமலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 472 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 1,535 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த 469 பேரும், திபெத்தைச் சேர்ந்த மூவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி பாறைகள், பனி, மண் மற்றும் பெருக்கெடுத்த நீர் ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பட்ட இயற்கைப் பேரழிவினால் இப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “வான்டர்” என்ற வர்த்தக செயற்கைக்கோள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள், வெள்ளத்திற்கு முன்னரும் பின்னரும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளன.

2024ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி எடுக்கப்பட்ட படங்களில், ஆற்றங்கரையில் அமைந்திருந்த பல அடுக்குகளைக் கொண்ட பெரிய எல்லைக் கட்டிடம், சாலைகள், நடைபாதைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் தெளிவாகக் காணப்படுகின்றன.

ஆனால், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் திகதி, அதாவது பேரழிவு ஏற்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட படங்களில், அந்த உள்கட்டமைப்புகளில் பெரும்பாலானவை பாறைகள், மண் மற்றும் இடிபாடுகளால் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட ஏனைய செயற்கைக்கோள் படங்களிலும் வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதையோ அல்லது இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளதையோ காண முடிகிறது.

இந்தப் பேரழிவைத் தொடர்ந்து, நேபாளத்தில் 977 பேரும், திபெத்தில் 558 பேரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் கண்டுபிடிக்கப்படாதவர்களில், அப்பகுதி வழியாகப் பயணித்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் உட்பட குறைந்தது 540 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.