கார் மோதி கோர விபத்து : கல்லூரி மாணவிகள் 2 பேர் பலி!!

31

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்த இரண்டு தோழிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தைச் சேர்ந்த ராஜாத்தி (19) மற்றும் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த அலிஷா நிலோபர் (19) ஆகிய இருவரும் தோழிகள் ஆவர். இவர்கள் இருவரும் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தனர்.

இந்நிலையில், இருவரும் ஒரே மொபட்டில் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது பயங்கரமாக மோதியது. கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டதில் ராஜாத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய அலிஷா நிலோபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முதலில் அருகில் உள்ள மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாகத் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சதீஷ்குமார் (24) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.