வறுமையிலும் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன்!!

133

“எதிர்காலத்தில் பொறியியலாளராக வருவதே தனது இலட்சியம்” என தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 166 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் மகேந்திரன் மாருதியன் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 4ஆம் திகதி வெளியாகியிருந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, தமது கல்விப் பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.

இந்நிலையில், நாளை நாடளாவிய ரீதியில் புதிய கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கோம்பாவில் திம்பிலி கிராமத்தில் வசித்து வரும் மாணவன் மகேந்திரன் மாருதியன், வறுமையான சூழலிலும் விடாமுயற்சியுடன் கல்வியில் கவனம் செலுத்தி சிறப்பான பெறுபேற்றைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மாணவனின் சாதனையைப் பாராட்டும் வகையில், புதுக்குடியிருப்பில் இயங்கி வரும் அறிவொளி புத்தகசாலையின் இயக்குநர் இன்று (06.09.2026) மாணவனின் இல்லத்திற்குச் சென்று அவருக்கு பதக்கம் அணிவித்து, பரிசுப் பொருட்களையும் வழங்கி கௌரவித்துள்ளார்.

தனது எதிர்கால இலட்சியம் தொடர்பில் மாணவன் மகேந்திரன் மாருதியன் கருத்துத் தெரிவிக்கையில், “எதிர்காலத்தில் பொறியியலாளராக வர வேண்டும் என்பதே எனது இலட்சியம்” எனத் தெரிவித்துள்ளார்.

கிராமப்புறச் சூழலில் இருந்து கல்வியில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று, மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ள இம்மாணவனின் சாதனை, ஏனைய மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

இவ்வாறான திறமையான மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு சமூகத்தினர், நலன்விரும்பிகள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் தொடர்ந்தும் ஆதரவளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் பல சிறந்த கல்விமான்களையும் தொழில்சார் நிபுணர்களையும் உருவாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.