
விபத்தில் சிக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வரும் காவல் அதிகாரி ஒருவருக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம், விபத்து நிவாரண நஷ்டஈடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் விரைவாக பெற்றுத்தருமாறு அவரது மனைவி பொலிஸ் மா அதிபரிடம் (IGP) அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த காவல் அதிகாரி, பொரளை பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் பயிற்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கியதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகள் காரணமாக, அதிகாரியால் அன்றாடச் செயற்பாடுகளைக் கூட சுயமாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு இதுவரை முழுமையான சுயநினைவு திரும்பவில்லை எனவும், உணவு மற்றும் சுவாசத்திற்காக தொண்டைப் பகுதியில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கணவரை முழுநேரமும் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், தம்மால் வேறு எந்தவொரு தொழிலிலும் ஈடுபட முடியவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
வாடகை வீட்டில் வசித்து வரும் தமது குடும்பத்திற்கு தற்போது நிலையான வருமானம் எதுவும் இல்லாத நிலையில், கணவரின் மருத்துவச் செலவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை சமாளிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற பின்னர் மூன்று மாதங்களுக்கான சம்பளமும், விபத்து விடுப்பு அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலும் ஆறு மாதங்களுக்கான சம்பளமும் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காவல் அதிகாரிக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம் மற்றும் விபத்து நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான ஆவணங்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். எனினும், குறித்த நடவடிக்கைகள் இதுவரை நிறைவடையவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விசேட புலனாய்வுப் பிரிவின் (SIU) விசாரணை காரணமாக ஓய்வூதியம் வழங்குவதற்கான நடைமுறைகள் தாமதமடைந்துள்ளதாகவும், மருத்துவக் குழு தொடர்பான சிக்கல்கள் காரணமாக விபத்து நஷ்டஈடு தொடர்பான கோப்புகள் முன்னும் பின்னுமாக அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது குடும்பம் எவரிடமும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள காவல் அதிகாரியின் மனைவி, தனது கணவருக்குச் சட்டரீதியாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றும் குடும்பத்திற்கான நீதியையே கோருவதாக தெரிவித்துள்ளார்.
எனவே, குடும்பத்தின் இக்கட்டான நிலைமையை கருத்திற்கொண்டு பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, ஓய்வூதியம், விபத்து நஷ்டஈடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் தாமதமின்றி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தமது நிலைமை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குச் செல்லும் வகையில் இந்தத் தகவலை பொதுமக்கள் பகிர்ந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





