கழுத்தில் டயருடன் உலா வந்த காட்டு யானை!!

23

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் கழுத்தில் டிராக்டர் டயர் மாட்டிக்கொண்ட நிலையில் காட்டு யானை ஒன்று வலம் வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனித – யானை மோதல்கள் அடிக்கடி நடைபெறும் கோலகாட் மாவட்டத்தின் மொரோங்கி வனப்பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று இந்த யானை நடமாடியுள்ளது.

தேயிலைத் தோட்டத்தில் உணவு தேடியவாறு இந்த யானை உலா வந்த நிலையில், அதன் கழுத்தில் டயர் மாட்டிக்கொண்டிருக்கும் நிழற்படங்களும் காணொளிகளும் சமூக வலைதளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும், உடனடியாக செயற்பட்ட வனத்துறை அதிகாரிகள் யானையின் கழுத்தில் இறுக்கமாக சிக்கியிருந்த டயரை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அந்த யானை நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.