எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

161

உலகச் சந்தையில் எரிபொருள் விலைகளின் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாத இறுதிக்குள் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோக நிறுவனங்களில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில், இன்று(14.09.2026) பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், உள்ளூர் சந்தையில் எரிபொருள் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுகின்றது. இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்து செயல்படுவது ஒரு சவாலாக உள்ளது என பல தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன.

அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் எதிர்காலத்தில் பொருத்தமான முடிவு எட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

மேலும், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கு பல தீர்வுகள் உள்ள நிலையில், கடந்த காலத்தைப் போலவே, தலையிட்டு எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது விலைகள் குறித்து ஒரு முடிவை எட்டுவது போன்ற பல்வேறு வழிமுறைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

தனியார் நிறுவனங்கள் பல்வேறு முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருந்தாலும், நுகர்வோரையும் கருத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஒவ்வொரு மாத இறுதியிலும் பெட்ரோலிய விலை திருத்தங்கள் செய்யப்படுவதால், தற்போதைய சூழ்நிலையையும் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கருத்தில் கொண்டு, இந்த மாத இறுதியிலும் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.