ஒருநாள் பிச்சைக்காரராக மாறிய 3000 கோடி சொத்து மதிப்புள்ள எம்.எல்.ஏ!!

17

ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள மும்பை எம்.எல்.ஏ ஒருவர் ஒரு நாள் பிச்சைக்காரராக மாறி தெருவோரத்தில் அமர்ந்து யாசகம் பெற்றுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள காட்கோபர் கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்ஏ வாக இருப்பவர் பாஜகவை சேர்ந்த பராக் ஷா(parag shah).

ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அவர், 2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனது சொத்துமதிப்பு ரூ. 3,383 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது தோற்றத்தை ஒரு பிச்சைக்காரர் போல் மாற்றிக்கொண்டு, பாதுகாப்பை துறந்து விட்டு, காட்கோபர் வீதிகளில் அமர்ந்து யாசகம் பெற்றுள்ளார். பிரபல அரசியவாதியாக இருந்தாலும் மக்கள் யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை.

ஜைன மதத்தின் சதுர்மா பண்டிகைகள் நடைபெறும் சூழலில், வாழ்க்கையையும், மக்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களையும் உண்மையாக அனுபவிப்பதற்காக, ஒரு நாள் பிச்சைக்காரராக ஆகும்படி தனது ஆன்மீக குருவான நம்ரமுனி மகாராஜின் ஆலோசனையின் பேரில் இதனை செய்துள்ளார்.

இந்த அனுபவம் குறித்து தனது குருவிடமும் மக்களிடமும் பகிர்ந்து கொண்ட பராக் ஷா, “ஒரு நபர் எனக்கு ரூ.20 வழங்கி சாப்பிடுமாறு கூறியுள்ளார். ஒரு சமோசா கடைக்கு சென்று தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி விட்டு சமோசா கேட்டபோது, அந்த ஏழை வியாபாரி முகம் சுழிக்காமல் எனக்கு இலவசமாகவே சமோசா வழங்கினார்.

நான் கவனித்த ஒரு விஷயம், மும்பை நகரம் அப்படிப்பட்டது, இங்குள்ள மக்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் உதவத் தயாராக இருப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் பிச்சைக்காரன் வேடத்தில் என் சொந்த வளாகத்திற்குள் சென்றபோது, ​​என் காவலாளியே என்னை வெளியே தள்ளிவிட்டார். என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி மக்களுக்கு உதவுவார், மேலும் எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எப்போதும் வற்புறுத்துவார்.

ஆனால் நான் பிச்சைக்காரன் வேடத்தில் அவரிடம் சென்றபோது, ​​அவர் என்னை விரட்டிவிட்டார். மக்கள் தனிநபரை விட பணம், பதவி மற்றும் அதிகாரத்திற்கே அதிக மதிப்பு கொடுக்கிறார்கள்” என கூறியுள்ளார்.

பராக் ஷா யாசகம் பெற்றது மட்டுமில்லாமல் ஒரு பிச்சைக்காரரை போல் சாலை ஓரத்தில் அமர்ந்து தனது கிடைத்த உணவை சாப்பிட்டார். அதன் பிறகு தனது பிச்சைக்காரர் தோற்றதை கலைத்துவிட்டு தான் யாசகம் பெற்ற பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார்.